Tuesday, May 10, 2011

வெட்டியான் கை.


பதறி நிற்கும் வெட்டியான் கை

பாவம் மட்டுமே செய்கை.

 

எழும்ப முயலும் என் மெய்.

எதற்கும் ஆகாத சக்கை.

 

விறைத்து வெடிக்கும் பேராசை.

உள்ளுறைந்து துடிக்கும் உயிரோசை.

 

வெறித்த பார்வை வினை இருத்தும்.

உரைத்த வார்த்தை உயிர் கொளுத்தும்.

 

தெளிந்த மனமோ தீர்வு கொள்ளும்

ஒளிந்த மனமோ தீர்வு காணும்.

 

கொள்கை காண்மின்.. உனை

கொள் கை காண்மின்.

 

எனை நம்பும் என் சாரார்

என்றெதயுமே சாரார்.

 

எமை நம்பிக் கண்டபின்

எதயுமே கூறார்.

 

எது கை எது மெய் எதையுமே

எனை கேளாய்.

 

சூழ்நிலை சுழற்சியில்

சோதனை முயற்சியில்

என்றுமே நீ வீழாய்....

 

கண்ணன் கடை விழி

கன்னியர் பக்கமே...

 

கர்ணன் இருக்கலாம்..

கவனமாய் இருக்கலாம்...

 

வெட்டியான் கைத்தடி

வீழட்டுமுன் காலடி.

 

வருகை நிமித்தம்

வாழுங்கள் கொஞ்சம்..

 

மீண்டு(ம்) வருவேன்

சந்திபோம் சபையிருந்தால்.....



Sunday, June 6, 2010

கூடியிருந்தால் ?


பிரத்யேகமாய் ஒரு மஞ்சம்
பிரேதக்குழி வசதியுடன்..,

உதிர எச்சில் உறைந்த கருக்கலைந்த சவங்கள்.
மீதிப்பசியுடன் பாதியாய் படுகுழி, .

முதல் கலவிக்காய் படபடக்கும் ஒருத்தி.
மழைக்கொதுங்கிய பறவை சிலிர்ப்பில்
மழலை மனம் தோய்ந்த நிர்வாணம்.

கடல் குடித்த பசியில் தயங்கும் ஒருவன்.
கட்டளை வரும்வரை காது கடிக்கும் காமம்.

சொல்லிப் புரிவதில்லை மன்மதக்கலை.
அழகோ?அபாயமோ? அடுத்த காலை

நிச்சயம் ஒன்று கூடியிருக்கும்
உறவிலோ குழியிலோ

கூடியிருந்தால்..,

Sunday, August 16, 2009

உன்னையும்

பசிக்கு அழும் சிறுவன்
பால் கிடைக்காத குழந்தை
வேலையில்லா இளைஞன் 
வீதிப் பிச்சைக்காரி
நிலமிழந்த விவசாயி
மனமுடைந்த தோழன்
கடைசியாய் பார்த்த விபத்து
காலுடைந்த நாய்க்குட்டி
தேசமிழந்த மக்கள்

அனைவரையும் தான் மறந்தேன்
உன் கடை விழி பார்வையில்.

அதனாலென்ன 
உன்னையும் ஒருநாள்.....

Monday, August 10, 2009

துணை

உன் 
கூந்தலேறி தற்கொலை 
செய்த புனிதப் பூக்களை 
அந்தரங்கப் பெட்டியில் 
அடக்கம் செய்து வைத்திருக்கிறேன்.

உன் நினைவுகளை எடுத்துக் கொண்டு 
உயிர்பிரியும் ஒருநாளில்
உதிர்ந்த உடலுக்கு துணை சேர்க்க.... 


Friday, June 19, 2009

மண்குதிரை

நமது இருக்கையை காவல்
காத்துக்கொண்டிருக்கிறது என் ஒருமை.
எனது வலத்தில் உனது இடத்தில்
வலை பின்னிக்கொண்டிருக்கிறது வெறுமை.

எதற்கென்றே தெரியாமல் ஏளனமாய்
சிரித்துக்கொண்டு போகிறான் ஒருவன்.
காற்றில் ஆடிக்கொண்டிருக்கிறது நாம்
கடைசியாய் சுவைத்த காலிக் குளிர்பானப் புட்டி.
மிரண்டு போய் திரும்புகிறது
குதித்து வந்த குழந்தை ஒன்று .
நம்மைப் பார்க்க வந்த நீர்க்காகம் என்னை
மட்டும் பார்த்து நீருக்குள் ஒளிகிறது.
வழக்கமான கடலைச் சிறுவன்
வரவே இல்லை கடைசி வரை.

கடைசியாய் மறுதலித்த வார்த்தை ஒன்று
காதுக்குள் கரைந்து கொண்டிருக்கிறது.
உன்னை மறந்து விட்டதாய் சொன்ன பொய்
உள்ளேயே வலித்துக் கொண்டிருக்கிறது.
உனக்காகவே உன்னை விட்டுக் கொடுத்தது
என்னையே ஏமாற்றிக்கொண்டிருக்கிறது.
வஞ்சித்ததாய் நீ சொன்ன வாள் வார்த்தை
நெஞ்சறுத்துக் கொண்டிருக்கிறது.
திரண்டு வந்த மேகம் கூட என்னைப்பார்த்து
கொஞ்சமாய் துப்பி விட்டு போகிறது .
கசிந்து வந்த கண்ணீர் வழிந்த நீரில்
கரைந்து காணாமல் போகிறது.

இயலாமையின் எரிச்சல்களோடு எதற்காகவோ
ஓடிக் கொண்டே தான் இருக்கிறது
உன் பாரம் சுமக்க முடியாமல்
ஊர் ஒதுக்கிய இந்த மண்குதிரை.

Saturday, June 13, 2009

உங்களுக்கு ஒன்றும் தெரியாது

தனிமை சிறையில் வலை
மேய்ந்து கொண்டிருக்கிறது.
வெறுமைச் சிலந்தி.

துப்பக்கூட திராணி இல்லாமல்
தூசுக்குள் முகம் புதைக்கிறது
துடைக்கப்படாத நிலைக்கண்ணாடி.

துப்பட்டா குடைக்குள்
நனையாத மழை காற்று வீசி
என் ஜன்னல் அறைகிறது.

சாரல் பட்ட திட்டுக்களுடன்
சாத்திய கண்ணாடிக் கதவை
மழை கழுவுகிறது.

ஊடுருவிப் பார்த்தாலும்
உங்களுக்கு ஒன்றும் தெரியாது
உள்ளிருந்து நான் அழுவது.

Sunday, May 10, 2009

என்ன செய்வது

உனது
நினைவுகளில்

அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அரைகுறையாய் உளறிவைத்தேன்.

கவிதை என்றார்கள்
புரியவில்லை என்றார்கள்.

என்ன செய்வது
அவளுக்கும்தான்
புரியவில்லை
என் காதலை!