RSS Feed

உன்னையும்

Posted by பித்தன்

பசிக்கு அழும் சிறுவன்

பால் கிடைக்காத குழந்தை
வேலையில்லா இளைஞன் 
வீதிப் பிச்சைக்காரி
நிலமிழந்த விவசாயி
மனமுடைந்த தோழன்
கடைசியாய் பார்த்த விபத்து
காலுடைந்த நாய்க்குட்டி
தேசமிழந்த மக்கள்

அனைவரையும் தான் மறந்தேன்
உன் கடை விழி பார்வையில்.

அதனாலென்ன 
உன்னையும் ஒருநாள்.....

துணை

Posted by பித்தன்

உன் 

கூந்தலேறி தற்கொலை 
செய்த புனிதப் பூக்களை 
அந்தரங்கப் பெட்டியில் 
அடக்கம் செய்து வைத்திருக்கிறேன்.

உன் நினைவுகளை எடுத்துக் கொண்டு 
உயிர்பிரியும் ஒருநாளில்
உதிர்ந்த உடலுக்கு துணை சேர்க்க.... 


மண்குதிரை

Posted by உத்ரா

நமது இருக்கையை காவல்
காத்துக்கொண்டிருக்கிறது என் ஒருமை.
எனது வலத்தில் உனது இடத்தில்
வலை பின்னிக்கொண்டிருக்கிறது வெறுமை.

எதற்கென்றே தெரியாமல் ஏளனமாய்
சிரித்துக்கொண்டு போகிறான் ஒருவன்.
காற்றில் ஆடிக்கொண்டிருக்கிறது நாம்
கடைசியாய் சுவைத்த காலிக் குளிர்பானப் புட்டி.
மிரண்டு போய் திரும்புகிறது
குதித்து வந்த குழந்தை ஒன்று .
நம்மைப் பார்க்க வந்த நீர்க்காகம் என்னை
மட்டும் பார்த்து நீருக்குள் ஒளிகிறது.
வழக்கமான கடலைச் சிறுவன்
வரவே இல்லை கடைசி வரை.

கடைசியாய் மறுதலித்த வார்த்தை ஒன்று
காதுக்குள் கரைந்து கொண்டிருக்கிறது.
உன்னை மறந்து விட்டதாய் சொன்ன பொய்
உள்ளேயே வலித்துக் கொண்டிருக்கிறது.
உனக்காகவே உன்னை விட்டுக் கொடுத்தது
என்னையே ஏமாற்றிக்கொண்டிருக்கிறது.
வஞ்சித்ததாய் நீ சொன்ன வாள் வார்த்தை
நெஞ்சறுத்துக் கொண்டிருக்கிறது.
திரண்டு வந்த மேகம் கூட என்னைப்பார்த்து
கொஞ்சமாய் துப்பி விட்டு போகிறது .
கசிந்து வந்த கண்ணீர் வழிந்த நீரில்
கரைந்து காணாமல் போகிறது.

இயலாமையின் எரிச்சல்களோடு எதற்காகவோ
ஓடிக் கொண்டே தான் இருக்கிறது
உன் பாரம் சுமக்க முடியாமல்
ஊர் ஒதுக்கிய இந்த மண்குதிரை.

உங்களுக்கு ஒன்றும் தெரியாது

Posted by உத்ரா

தனிமை சிறையில் வலை
மேய்ந்து கொண்டிருக்கிறது.
வெறுமைச் சிலந்தி.

துப்பக்கூட திராணி இல்லாமல்
தூசுக்குள் முகம் புதைக்கிறது
துடைக்கப்படாத நிலைக்கண்ணாடி.

துப்பட்டா குடைக்குள்
நனையாத மழை காற்று வீசி
என் ஜன்னல் அறைகிறது.

சாரல் பட்ட திட்டுக்களுடன்
சாத்திய கண்ணாடிக் கதவை
மழை கழுவுகிறது.

ஊடுருவிப் பார்த்தாலும்
உங்களுக்கு ஒன்றும் தெரியாது
உள்ளிருந்து நான் அழுவது.

என்ன செய்வது

Posted by உத்ரா

உனது

நினைவுகளில்

அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அரைகுறையாய் உளறிவைத்தேன்.

கவிதை என்றார்கள்
புரியவில்லை என்றார்கள்.

என்ன செய்வது
அவளுக்கும்தான்
புரியவில்லை
என் காதலை!

வேறென்ன செய்ய?

Posted by உத்ரா

எத்தனிக்கும் வார்த்தைகளை
எச்சி விழுங்கி முடித்த
இரக்கமில்லாத மாலை அது.

கடைசியாய் உன்னை கண்ட கணங்கள்
கண்களில் புரையோடிவிட்ட ரணங்கள்.

எனக்கோ உனக்கோ யார் முகமும் பார்க்க
இயலாத சந்திப்புஇறுதிச் சந்திப்பு!

வார்த்தை ரவைகளை இழுத்துப் பிடித்த
வாய்த் துப்பாக்கி விரைத்து விட்டது.
தோரணத் துப்பட்டா துவண்டு போய் கிடந்தது.

காற்றில் அலைந்த கற்றை குழலொன்று  
கண்ணீர்ப்பசை உபயத்தில் உன்
கன்னத்திலேயே ஒட்டிக் கொண்டது.

நம்மவர்களுக்காகவே விட்டுக் கொடுத்திருந்தோம்
நம்மை நாமே.

என்னை உடைத்து உன்னை உடைக்க
விரும்பாமல் இறுகப் பிடித்திருந்தேன் என்னை.
உன் கண்ணீரில் தான் கரைந்து விட்டேன் .

எதுவுமே பேசாமல் எழுந்து நின்றோம்
பிரிந்து செல்ல.

விக்கித்த வார்த்தை சேர்த்து
வெறுமையாய் வாழ்த்தினாய்
"என்னை விட சிறந்தவளாய்
உன்னைத் தேடி வருவாள்என.

விரக்தியாய் சிரிக்காமல்
வேறென்ன செய்ய?


வரசொல்லுங்கள் அவளை ...

Posted by உத்ரா

அவள் 

வசந்த காலத்து 
வண்ணத்துபூச்சி.

உயிரை உரசினாள்
வண்ணக் காயங்கள்
உடன் நடந்தாள்
மகரந்த சுவடுகள்
தனித்து பறந்தாள்
வெறுமை தடயங்கள்.

நினைவுகளின் 
நிழலில் 
இது 
உயிர் 
உதிர் காலம்.

ஏக்கங்களின் கோடையிலும் 
தாக்கங்களின் குளிரிலும் 
வறண்டு போகும் 
சூன்யத்தின் கல்லறை
என்
எதிர்காலம்.

வழி தெரிந்தால் 
உயிர் பசித்தால் 
வரசொல்லுங்கள் 
அவளை.

என்
கல்லறை பூக்களில் 
காதல் நிரப்பி 
வைத்திருப்பேன்.

ஒரு கைக்குட்டை க(வி)தை

Posted by உத்ரா

இருண்ட வானம்
கலைந்த கூட்டம் 

மழை பயம் 

கைபேசி ஞாபகத்தில் 
கைக்குட்டை 
மறந்து சென்றிருந்தாய் .

என்
காதலையும்தான்.

உன் மேசையில் 
ஒய்யாரமாய் 
உட்கார்ந்திருந்தது 

அந்த 
அனாதைக் குழந்தை.

உன் 
கை(க்)குட்டை.

என்
கை நீளம்.

கபளீகரித்தேன்.

சாளரம் 
நோக்கினேன்.

மழை வருமா 
தெரியவில்லை .

கவிதை 
வந்துவிட்டது !

கைக்(கூ) குட்டை

Posted by உத்ரா

(பெரும்பாலும் வெள்ளை கைக்குட்டை பற்றி..... )                            

வரைந்த 
ஓவியத்துக்கு 
தூசு துடைக்கும் 
தூரிகை. 
------------------------------------------------------------------------
தும்மல் 
தூவானம் 
நீ 
வெள்ளை குடை .
------------------------------------------------------------------------
அட !
சதுர நிலா !!!!
------------------------------------------------------------------------
உன் 
விதவை 
தோழி.
------------------------------------------------------------------------
உன் 
உள்ளங்கை
உலகத்தின் 
குட்டி 
விடியல்.
------------------------------------------------------------------------
உன்னதைப்
போலவே
களங்கமில்லாத 
கைத்தறி 
கற்பு.
------------------------------------------------------------------------
உன் 
மின்னல்
சிரிப்பின் 
சின்ன 
பிரதி. 
------------------------------------------------------------------------
காந்தள் 
கரங்களில் 
கள்ளுண்ணும் 
பட்டாம்பூச்சி. 

காந்தள் --> ஒரு சிவந்த மலர் 
கள் --> வியர்வை 
------------------------------------------------------------------------
கல்யாணம் 
ஆகியும் 
பிரம்மச்சாரி.

(கூடவே  இருந்தாலும் கட்டிலில் இடமில்லை )
------------------------------------------------------------------------
உன் 
வியர்வை 
(பனி) துளி 
அருந்தும் 
வெல்வெட்டு 
பூச்சி. 
------------------------------------------------------------------------
உன் 
சிவந்த மொட்டில்
வெள்ளை இதழ்கள்.

சிவந்த மொட்டு --> உள்ளங்கை

நாம்

Posted by உத்ரா


நாம்

அன்றில்
மான்
மயில்
புறா
..
..
..

என்று
காதலர் பட்டியலிட்டோம் ...

நம்மை எங்கே
என்று
உடைந்து விட்டாய் .

மெல்ல
அணைத்து கொண்டாய்

அன்றிலுக்கு மேல்
நாம்
பார்க்க ....