நமது இருக்கையை காவல்
காத்துக்கொண்டிருக்கிறது என் ஒருமை.
எனது வலத்தில் உனது இடத்தில்
வலை பின்னிக்கொண்டிருக்கிறது வெறுமை.
எதற்கென்றே தெரியாமல் ஏளனமாய்
சிரித்துக்கொண்டு போகிறான் ஒருவன்.
காற்றில் ஆடிக்கொண்டிருக்கிறது நாம்
கடைசியாய் சுவைத்த காலிக் குளிர்பானப் புட்டி.
மிரண்டு போய் திரும்புகிறது
குதித்து வந்த குழந்தை ஒன்று .
நம்மைப் பார்க்க வந்த நீர்க்காகம் என்னை
மட்டும் பார்த்து நீருக்குள் ஒளிகிறது.
வழக்கமான கடலைச் சிறுவன்
வரவே இல்லை கடைசி வரை.
கடைசியாய் மறுதலித்த வார்த்தை ஒன்று
காதுக்குள் கரைந்து கொண்டிருக்கிறது.
உன்னை மறந்து விட்டதாய் சொன்ன பொய்
உள்ளேயே வலித்துக் கொண்டிருக்கிறது.
உனக்காகவே உன்னை விட்டுக் கொடுத்தது
என்னையே ஏமாற்றிக்கொண்டிருக்கிறது.
வஞ்சித்ததாய் நீ சொன்ன வாள் வார்த்தை
நெஞ்சறுத்துக் கொண்டிருக்கிறது.
திரண்டு வந்த மேகம் கூட என்னைப்பார்த்து
கொஞ்சமாய் துப்பி விட்டு போகிறது .
கசிந்து வந்த கண்ணீர் வழிந்த நீரில்
கரைந்து காணாமல் போகிறது.
இயலாமையின் எரிச்சல்களோடு எதற்காகவோ
ஓடிக் கொண்டே தான் இருக்கிறது
உன் பாரம் சுமக்க முடியாமல்
ஊர் ஒதுக்கிய இந்த மண்குதிரை.